Loading...
Tuesday, 24 May 2016

அதிக மருத்துவ குணங்களை கொண்ட முள்ளங்கி..

கிழங்கு வகையை சேர்ந்த முள்ளங்கி வெள்ளை, சிவப்பு ஆகிய இரு நிறங்களில் உள்ளன. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் பல நோய்களுக்கு மருந்தாகிறது.

முள்ளங்கியில் ஒருவித காரத்தன்மையும், நெடியும் இருக்கும். இது கந்தக சத்தால் உண்டாகிறது. முள்ளங்கியில் இருக்கும் பல வகையான கந்தக மூலக்கூறுகளே அதன் மருத்துவதன்மைக்கு காரணமாகின்றன.

முள்ளங்கி வெப்பத்தன்மையை உள்ளடக்கியது. அதே சமயம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலுக்கு குளிர்ச்சியையும் அளிக்கின்றது.

ஆஸ்துமா, மூச்சிரைப்பு, சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு கபம் தோன்றும். அதனை முள்ளங்கி வெளியேற்றும். தொண்டைக்கட்டையும், மூக்கு– தொண்டை பகுதியில் ஏற்படும் தொற்று நோய்களையும் முள்ளங்கி குணப்படுத்தும்.

முள்ளங்கி சாறு 30 மில்லியுடன் சிறிது நீர் கலந்து, அரை சிட்டிகை மிளகு தூளும் சேர்த்து பருகினால் கபம் வெளியேறும். தொண்டை அழற்சியும் நீங்கும்.

முள்ளங்கி கல்லீரலுக்கு சிறந்த நண்பன். இதில் உள்ள கந்தக சத்துக்கள் பித்தநீரை சீராக சுரக்கச் செய்யும். இதனால் கொழுப்பு மற்றும் மாவு சத்துக்கள் நன்றாக ஜீரணமாகும். பித்தப்பையில் கற்களும் தோன்றாது. ரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தடுக்கப்படும். ரத்தத்தில் பிராணவாயுவும் அதிகமாகும்.

வயிற்று உப்புசம் ஏற்படும்போது பார்லி கஞ்சியுடன் 30 மிலி முள்ளங்கி சாறு ¼ தேக்கரண்டி இந்துப்பு கலந்து பருகினால் உப்புசம் நீங்கும். ஜீரண தொந்தரவுகள் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் முள்ளங்கியை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

முள்ளங்கியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்க உதவுகின்றது. குடலில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கும் முள்ளங்கி மருந்தாகும்.

இதில் வைட்டமின்– ஈ சத்து அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சிறந்த கிருமி நாசினியாகவும், உடல் வலிகளை நீக்கும் சக்தி 
கொண்டதாகவும் முள்ளங்கி இருக்கிறது. புற்றுநோய் உள்ளவர்கள் முள்ளங்கியை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முள்ளங்கி, சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்க உதவுகிறது. தினமும் 50 மிலி முள்ளங்கி சாற்றை சிறிது நீர் கலந்து சாப்பிட்டுவந்தால் சிறு          நீரக கற்கள் வெளியேறும். சிறுநீரக தொற்றும் நீங்கும். இதில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரை அதிகப்படுத்தி வெளியேற்றும். அதனால் உடலில் உள்ள கழிவுகள் நீங்கும். வீக்கம், உடல் வலியும் போகும்.

முள்ளங்கியில் போலிக் அசிட் உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால் வீக்கம் மற்றும் கர்ப்ப காலத்தில் உண்டாகும் ரத்த அழுத்தம் நீங்கும்.

முள்ளங்கி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகின்றது. அதனால் சர்க்கரை நோய் இருப்பவர்கள் முள்ளங்கியை சாலட் செய்து சாப்பிடலாம். உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. இது சருமத்தை பொலிவாக்கி, இளமையை பாதுகாக்கவும் செய்யும்.

சட்னி

முள்ளங்கி – ¼ கிலோ 
காய்ந்த மிளகாய் – 4
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி 
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி 
கொத்தமல்லி விதை – ½ தேக்கரண்டி 
வெந்தயம் – ¼ தேக்கரண்டி
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் – ¼ தேக்கரண்டி 
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு – ½ தேக்கரண்டி
பெருங்காயதூள் – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை– தேவைக்கு
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை: முள்ளங்கியை தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி புளி, கொத்தமல்லி விதை, வெந்தயம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போன்றவைகளை சேர்த்து வதக்குங்கள். அத்துடன் முள்ளங்கி, மஞ்சள்தூள் கலந்து கிளறுங்கள். ஆறிய பின்பு உப்பு கலந்து அரைத்து, தாளியுங்கள்.

இந்த சட்னியை இட்லி, தோசை, பொங்கல், சப்பாத்தி போன்றவை
களோடு சாப்பிடலாம்.

தயிர் பச்சடி

முள்ளங்கி – ¼ கிலோ 
சிறிய வெங்காயம் – 100 கிராம் (சிறிதாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கிக் கொள்ளவும்) 
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி (சிறிதாக நறுக்கியது)
தயிர் – 100 மிலி
உப்பு – தேவைக்கு    

தாளிக்க:

கடுகு – ½ தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயதூள் – ½ தேக்கரண்டி

செய்முறை: முள்ளங்கியை தோல் நீக்கி, துருவுங்கள். சிறிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி தழை போன்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு உப்பு, தயிர் கலந்திடுங்கள். பொருட்களை தாளித்துக்கொட்டினால் பச்சடி ரெடி.  முள்ளங்கி பச்சடி சப்பாத்தி, சாதத்துக்கு சுவையாக இருக்கும்.

சாலட்

முள்ளங்கி – ¼ கிலோ 
பாசிப்பருப்பு – 2 தேக்கரண்டி (½ மணிநேரம் நீரில் ஊறவைக்கவும்)
இஞ்சி துருவல் – ½ தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2 (சிறிதாக நறுக்கவும்)
கொத்தமல்லி தழை நறுக்கியது – 1 கைப்பிடி அளவு
உப்பு – தேவைக்கு

செய்முறை: முள்ளங்கியை தோல் நீக்கி துருவவும். பாசிபருப்பை நீரில் இருந்து வடிகட்டி எடுக்கவும். 

பாத்திரத்தில் துருவிய முள்ளங்கி, பாசிபருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, கொத்தமல்லி தழை கலந்து 10 நிமிடம் ஊற வைத்து பின்பு பரிமாறவும். 

இது உடல் எடை குறைப்பிற்கு ஏற்ற உணவு. சர்க்கரை நோயாளிகள் இதை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

ரொட்டி

முள்ளங்கி – ¼ கிலோ 
கோதுமை மாவு – 200 கிராம்
மிளகாய் தூள் –½ தேக்கரண்டி 
கறிமசாலா தூள் – ½ தேக்கரண்டி 
மஞ்சள் தூள்     –½ தேக்கரண்டி 
ஓமம் – ½ தேக்கரண்டி 
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

முள்ளங்கியை தோல் நீக்கி, துருவுங்கள். கோதுமை மாவு மற்றும் மிளகாய்தூள், கறி மசாலாதூள், மஞ்சள் தூள், ஓமம், உப்பு ஆகியவைகளை சேருங்கள். அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் கலந்து சிறிது சிறிதாக நீர் கலந்து கெட்டியாக பிசைந்து பெரிய எலுமிச்சம்பழம் அளவு உருண்டைகளாக பிடியுங்கள். அதில்  கோதுமை மாவு தடவி ரொட்டியாக்கி சுட்டு எடுங்கள். 

தயிர், ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் இது அதிக சுவைதரும்.

ஸ்பெஷல் உருண்டை

முள்ளங்கி – ¼ கிலோ 
பச்சைமிளகாய் – 2 (நறுக்கவும்)
கோதுமை மாவு – 2 தேக்கரண்டி
கடலைமாவு – 100 கிராம்
தயிர் – 100 மிலி
பெருங்காயதூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
ஓமம் – 1 தேக்கரண்டி

செய்முறை: முள்ளங்கியை தோல் நீக்கி துருவவும். பாத்திரத்தில் துருவிய முள்ளங்கி, பச்சை மிளகாய், கடலை மாவு, கோதுமை மாவு, ஓமம், உப்பு, தயிர் கலந்து கெட்டியாக பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். அவைகளை கையால் லேசாக தட்டி இட்லி பாத்திரத்தில்  பத்து நிமிடம் வைத்து பிறகு சுவைக்கவும். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடும்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP