Loading...
Saturday, 23 April 2016

வயிற்றில் வளரும் உங்க குட்டி பாப்பாவை கவனமா பார்த்துகோங்க....!!

ரத்தப் போக்கு’ பயம்

தாய்மை... ஒவ்வொரு பெண்ணும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் தருணம். கரு சுமக்கும் காலங்களில் ஆயிரமாயிரம் சந்தேகங்கள் வரும்.  சின்னதொரு மாற்றம் கூட, மனதளவில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். ஒரு பெண்ணின் அனுபவம், இன்னொரு பெண்ணுக்கு இருப்பது இல்லை.

ஒரு பெண் தாய்மை அடைந்ததற்கான முதல் அறிகுறி, மாதவிலக்கு நின்று போவதுதான். அப்படி இருக்கும்போது கருவுற்ற காலங்களில் ஏற்படும்  ரத்தப்போக்கு, பெண்களை பயங்கரப் பதற்றத்துக்கு உள்ளாக்கிவிடும். 'ரத்தப்போக்கு இருந்தாலும் குழந்தை நலமாய் இருக்கிறது’ என்கிற டாக்டரின்  ஆறுதல், மீண்டும் அடுத்தமுறை ரத்தம் பார்க்கும்போது மறந்துபோகும். பதற்றம் பரவும்.  இது ஏன் ஏற்படுகிறது?

கருவுற்ற பெண்ணுக்கு இரத்தபோக்கு ஏற்பட்டால் கருவுற்ற பெண்ணைவிட, அம்மாவோ, பாட்டியோதான் இன்னும் பயந்து விடுகிறார்கள். பலர் கரு  சிதைந்துவிட்டதாக தவறாகப் பதறுவதால்தான் அத்தனை கலாட்டாக்களும்!

கருவுற்ற காலத்தில் ரத்தம் ஏன் வெளியேறுகிறது, பயப்படக் கூடிய அளவுக்கு இது பெரிய பிரச்னையா என்கிற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்,  சென்னை ஈ.வி. கல்யாணி மெடிக்கல் சென்டரின் ஓய்வு பெற்ற மகப்பேறு மருத்துவர் கீதா அர்ஜூன். கருவுற்ற பெண்கள் பதற்றமின்றி தாய்மையை  சந்தோஷமாக அனுபவிக்க டாக்டரின் விளக்கம் நிச்சயம் உதவும்.

''ரத்தப்போக்கைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. அதை ஓர் அறிகுறியாக எடுத்துக்கொண்டு, உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டும். மிகச்  சிலருக்கு கர்ப்ப காலத்தின் ஒன்பது மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். பெரும்பாலான பெண்களுக்கு,  'ஃபர்ஸ்ட் ட்ரைமெஸ்டர்’  என்று மருத்துவத் துறையில் சொல்லப்படும் முதல் மூன்று மாதங்களில்தான் இது ஏற்படுகிறது.'' என்கிறார் டாக்டர் கீதா. ''பயப்படக்கூடாது என்று  சொன்னதும், இது சகஜமானது’ என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். ரத்தப்போக்கின் சில அறிகுறிகளை வைத்து அது தீவிரமான பிரச்னையா, அதற்கு  என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவோம்'' என்கிறார்.

ரத்தப் போக்கு ஏன்?

கருத்தரித்த 10 முதல் 14 நாட்களுக்குள் கருமுட்டை கர்ப்பப்பையின் உட்புறத்தில் தன்னைப் பதித்துக்கொள்ளுதல் (Impalantation), கர்ப்பப்பை  வாய்ப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள், கருச்சிதைவு, கர்ப்பப்பைக்கு வெளியே ஃபெலோப்பியன் குழாயில் ஏற்படும் கர்ப்பம் மற்றும் முத்துக் கர்ப்பம்...  இவற்றுள் ஏதாவது ஒன்று ரத்தப்போக்குக்குக் காரணமாக இருக்கலாம். இவை தவிர, கர்ப்பப்பை வாயில் தோன்றும் சிறு கட்டிகள் (polyps) மற்றும்  பெண் உறுப்பில் காயம் அல்லது வெட்டு காரணமாகவும் ரத்தப்போக்கு ஏற்படலாம்.  

கருவுற்ற இரு வாரங்களுக்குள் சிலருக்கு லேசான ரத்தக்கசிவு இருக்கும். சினைப்படுத்தப்பட்ட கருமுட்டை, கர்ப்பப்பையின் உட்புறத்தில் தன்னைப்  பதித்துக்கொள்ளும்போது இவ்வாறு ஏற்படலாம். இந்த காலகட்டத்தில்  பலரும் கரு சிதைந்துவிட்டதாகப் பதறிப் போய் வருவார்கள். சில பெண்கள்  இதை மாதவிலக்கு என்று தவறாக நினைத்து, தான் கர்ப்பமானதையே உணராமல் இருப்பதும் உண்டு.

கர்ப்பகாலத்தில், கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கு அதிகமான ரத்தம் செல்லும். எனவே, அந்தப் பகுதி மிக மிருதுவாகவும் ரத்தம் கோத்தது போலவும்  இருக்கும். அந்தப் பகுதியுடன் தொடர்பு கொள்ளும்போது (உதாரணமாக: உடல் உறவு அல்லது மருத்துவப் பரிசோதனை) சிறிதளவு ரத்தக்கசிவு  ஏற்படலாம். இதுபற்றி பயப்படத் தேவை இல்லை. இது இயற்கையாகவே நின்றுவிடும்.

கருவுற்ற தொடக்கத்தில் இருந்தே ரத்தக்கசிவு இருக்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, அந்தக் கர்ப்பம் அப்படியே தொடர்ந்துவிடும்.  ஆனால், மாதவிலக்கு நாட்களைவிட அதிகமான ரத்தப்பெருக்கு, அடிவயிற்றில் சுருட்டிப் பிடிக்கும் வலியுடன் கூடிய ரத்தப்போக்கு, மயக்கம் மற்றும்  தலைசுற்றல்,  ரத்தப்போக்குடன் காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டும். டாக்டர் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்  மூலம் நிலைமையைத் தெரிந்துகொண்டு, சிகிச்சை அளிப்பார்''.

இரண்டாம், மூன்றாம் மும்மாதங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு பற்றி...?

இந்தக் காலகட்டத்தில் கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் தோன்றும் சிறு கட்டிகளால் (polyps) ரத்தம் வெளியேறலாம். தாம்பத்ய உறவுக்குப் பின்னும்  சிலருக்கு ரத்தப்போக்கு ஏற்படும். இந்தச் சமயத்தில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு குறைவுதான் என்றாலும், மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.  கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, எந்தவிதமான வலியும் இல்லாமல் சில நேரங்களில் திறந்துகொள்ள நேரும்போதும், நச்சுக்கொடி இயல்புக்கு மாறாக  இருந்தாலும் ரத்தப்போக்கு இருக்கலாம். சில நேரங்களில், குறித்த நாளுக்கு முன்பே தோன்றும் பிரசவவலிகூட, முதலில் ரத்தப்போக்குடன்  ஆரம்பிக்கலாம். எதுவாக இருந்தாலும், மருத்துவரிடம் உடனடியாக ஆலோசிப்பது நல்லது''.

தாய்மைக் காலம் முழுவதும் ரத்தப் போக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?

மூன்றாம் மும்மாதம் என்பது கர்ப்பகாலத்தின் கடைசிக் காலம். இந்தச் சமயத்தில் சிலருக்கு ரத்தப்போக்கு ஏற்படலாம். இது தாய், குழந்தைக்கு  ஆபத்தை விளைவிக்கும் என்பதால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்.

நச்சுக்கொடி விலகுதல், நச்சுக்கொடி கீழிறங்கி இடம் மாறுதல் போன்றவைதான், இந்தக் கடைசி மும்மாதங்களில் ரத்தம் வெளியேறக்் காரணம்.  நச்சுக்கொடி விலகும் பிரச்னை 100ல் ஒருவருக்குத்தான் ஏற்படும். நச்சுக்கொடி கீழிறங்கி, இடம் மாறும் பிரச்னை 200 பேரில் ஒருவருக்கு ஏற்படும்.  இவர்களுக்கு வலியின்றி ரத்தப்போக்கு இருக்கும். மருத்துவமனையிலேயே ஓய்வு எடுக்குமாறு சொல்வார்கள். கட்டுங்கடங்காமல் ரத்தம் போனால்,  குழந்தையின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படாமல் அறுவைசிகிச்சை செய்து எடுத்துவிடுவார்கள்.'

நச்சுக்கொடி விலகும் பிரச்னை யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

'ஏற்கெனவே கருத்தரித்தவர்கள், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன் பிரசவத்தில் நச்சுக்கொடி விலகியவர்கள், கர்ப்பகாலத்தில் மிக உயர்ந்த ரத்த  அழுத்தம் உடையவர்கள்... இவர்களுக்கு  நச்சுக்கொடி விலகும் அபாயம் உள்ளது. அடிவயிற்றில் மிகவும் பலமாக அடிபட்டாலும் இவ்வாறு ஏற்படலாம்.  இரட்டைக் குழந்தைகள் உள்ள பெண்களுக்கும் நச்சுக்கொடி கீழிறங்கும் ஆபத்து உள்ளது.'

ரத்தப்போக்கு இருந்தால் பெட் ரெஸ்ட் அவசியமா?

மிகக் குறைந்த அளவில் ரத்தக்கசிவு இருந்தால், நிச்சயம் ஓய்வு தேவை. குறைவான, எளிய வேலைகள் மட்டும் பார்க்கலாம். ரத்தப்போக்கு கொஞ்சம்  அதிகமாக இருந்தால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும்.

ரத்தப்போக்கு முழுவதுமாக நின்ற பிறகு, இயல்பு வாழ்க்கைக்குத்  திரும்பலாம். ரத்தப்போக்கு இருக்கும்போது தாம்பத்ய உறவைத் தவிர்க்க வேண்டும். கடைசி மூன்று மாதங்களில் அதிக அளவு ரத்தப்போக்கு  ஏற்பட்டால், ரத்தம் கொடுக்கவும் நேரிடலாம்.''

இதற்கான சிகிச்சைகள் என்ன?

கருவில் இருக்கும் குழந்தை நார்மலாக இருந்தால், எந்தச் சிகிச்சையும் தேவை இல்லை... மேலும், பயப்படவும் தேவைஇல்லை'' என்று  கர்ப்பிணிகளுக்கு ஆறுதல் தருகிறார் டாக்டர் கீதா அர்ஜூன்.

ரத்தப் போக்கு இருப்பவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுமா?

கர்ப்பம் தரித்தவர்களில் 15 முதல் 20 சதவிகிதம் பேருக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. அவர்களில் பலருக்கு, முதல் 12 வாரங்களில் ஏற்படுகிறது.  எனவே முதல் மூன்று மாதங்களில் ரத்தப்போக்கு இருந்தால், அது கருச்சிதைவாகவும் இருக்கலாம்.

மருத்துவரிடம் சென்று, குழந்தையின் இதயத்  துடிப்பைப் பரிசோதித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். இதயத்துடிப்பு சீராக இருந்தால், ரத்தப் போக்குக்கான காரணத்தைக் கண்டறிந்து டாக்டர்  சொல்லும் சிகிச்சைகளைத் தொடர வேண்டும்...

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP